ஈரோட்டில் மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து, நேற்று குவிண்டால் ரூ.18,850-ஐ தொட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குவிண்டாலுக்கு சுமார் ரூ.1,700 வரை உயர்ந்துள்ளது.
ஈரோடு பிரதான 4 சந்தையில், திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. கடந்த ஜூலையில் குவிண்டால் ரூ.19,150 தாண்டி விற்பனையான மஞ்சள், ஆகஸ்ட்-செப்டம்பர் தொடக்கத்தில் ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை சரிந்தது. இந்த சரிவு சுமார் 2 மாதம் நீடித்தது.
தற்போது பழைய மஞ்சள் இருப்பு குறைந்ததால், விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஈரோடு வெளிமார்க்கெட்டில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.12,139 முதல் ரூ.18,850 வரை விற்பனையானது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விரலி மஞ்சள் ரூ.13,299 முதல் ரூ.18,555 வரையிலும், ஈரோடு சொசைட்டியில் ரூ.12,149 முதல் ரூ.18,064 வரையிலும் விலை போனது. சந்தை தகல்களின் படி, நல்ல தரமான விரலி மஞ்சள் சில இடங்களில் ரூ.19,800 முதல் 20,000 வரையிலும், சேலம் விரலி ரகங்கள் ரூ.20,700 முதல் ரூ.25,500 வரையிலும் விலை போனது.
ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறுகையில், "எல் நினோவால் தேசிய அளவில் மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பல பகுதிகளில் விளைச்சல் குறைவாக இருந்ததால், பழைய மஞ்சள் கையிருப்பு போதிய அளவு இல்லை. தேவை அதிகரித்துள்ளதாலும், வரத்து குறைந்தாலும் விலை உயர்ந்துள்ளது. தொடர் பண்டிகைகள் வருவதால் மஞ்சள் தேவை மேலும் அதிகரிக்கும், இதனால் ஈரோடு மஞ்சளுக்கு மேலும் விலை உயர வாய்புள்ளது" என்றார்.
சாகுடி பரப்பு 10% சரிவு:
தேசிய அளவில் 2026-27 சீசனில் மஞ்சள் சாகுபடி சுமார் 2.72 லட்சம் ஹெக்டேரரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சீசனை விட சுமார் 10 சதவீதம் குறைவு. எல் நினோ தொடர்பான மழைப்பெய்வது குறைவால், பல மாநிலங்களில் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பழைய மஞ்சள் கையிருப்பு சுமார் 15 லட்சம் மூட்டைகளே உள்ளன. இது கடந்த சீசனை விடக் குறைவு. இதனால் சந்தையில் விலை உறுதியாக ஏறும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி 4% உயர்வு
ஏப்ரல்–ஜூலையில் மொத்த மஞ்சள் ஏற்றுமதி 4% உயர்ந்து 65,476 டன்னாக உள்ளது. இதனால் வெளிநாட்டுத் தேவை நிலையாக உள்ளது. ஆனால் உள்நாட்டு இருப்பு குறைவால் விலை உயர்வு தொடர்கிறது.